காவேரிப்பாக்கம் யூனியன் சிறுவளையம் கிராமம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரமேஷ் மகள் தேவதர்ஷினி(13). பனப்பாக்கம் அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல அனைவரும் உணவருந்திவிட்டு வீட்டு வராண்டாவில் படுத்து உறங்கியுள்ளனர்.

நள்ளிரவு 1 மணியளவில், வீட்டுக்குள் புகுந்த பாம்பு, தூங்கிக்கொண்டிருந்த சிறுமி தேவதர்ஷினியை கடித்துள்ளது. இதில் மயங்கி விழுந்த சிறுமியை மீட்டு புதுப் பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.