வேம்பி பேருந்து நிறுத்தம் அருகே கலவை மாம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில் பேருந்து தாமதமாக வருவதால் பஸ்சை மறியல் செய்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கலவை அருகே தினசரி மாணவ மாணவிகள் செல்லும் பேருந்து தாமதமாக வருவதால் பேருந்தை மடக்கி மறியலில் ஈடுபட்டு முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.

கலவை அடுத்த வேம்பி ஊராட்சியில் அத்தியானம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலவை அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தினசரி பள்ளிக்கு மற்றும் வேலைக்குச் செல்பவர்களும் கலவைக்கு செல்ல வேண்டும் என்றால் 9 கிலோமீட்டர் உள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேம்பி கிராமத்திற்கு நடந்து சென்று பேருந்து நிறுத்தம் அருகே சென்று பேருந்தில் கலவை செல்ல வேண்டும். இதுகுறித்து, அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால், மற்றும் பொதுமக்கள் பலமுறை போக்குவரத்து பணிமனைக்கு மனு வழங்கியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும், கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் பேருந்து இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். 

அதேபோல், ஆரணியில் இருந்து மாம்பாக்கம் வழியாக கலவைக்கு வரும் பேருந்து தினசரி காலை 8.45 மணிக்கு வேம்பி பேருந்து நிறுத்தம் அருகே வரவேண்டும்.ஆனால் பேருந்து தினமும் 9.20 மணிக்கு தான் தாமதமாக வருவதால் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு தாமதமாக செல்கின்றனர்.

இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடமும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தாமதமாக வருவதால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள். பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலவை-மாம்பாக்கம் நெடுஞ்சாலையில் பேருந்தை மடக்கி சாலை மறியல் செய்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் பாரதிதாசன், தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, சங்கர், ரகுராமன் ஆகியோர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சு வார்த்தையை ஏற்று மறியல் மற்றும் முற்றுகை ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.