ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாபர் ஷெரீப் (30). இவர் இடியாப்பம் வியாபாரம் செய்து வந்தார். 

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜாபர்ஷெரிப் தனது மகன் சோபனுடன் (9) பைக்கில் நந்தியாலம் சென்றார். தென் நந்தியாலம் கூட்ரோடு பகுதியில் சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரத்திலிருந்து ஆற்காடு வழியாக வேலூர் நோக்கிச் சென்ற தனியார் பஸ் பைக் மீது மோதியது.

மேலும் அருகில் நின்ற மற்றொரு பெண் மீது மோதியது. இதில் ஜாபர்ஷெரிப், அவரது மகன் சோபன் மற்றும் ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணாநகரைச் சேர்ந்த லட்சுமி (38) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி வியாபாரி ஜாபர்ஷெரிப் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜாபர் ஷெரிப் மனைவி யாஸ்மின் பானு ரத்தினகிரி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்,