ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில், கந்த சஷ்டி விழாவின் 6ம் நாளில் தங்க கவச அலங்காரத்தில் சுவாமி பாலமுருகன் அருள்பாலித்தார்.
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25ம் தேதி தொடங்கியது. விழாவின் 6வது நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சுப்பிரமணிய திரிசதி அர்ச்சனையும், அலங்காரமும் நடைபெற்றது. பால முருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார்.

மேலும், சுவாமி பால முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தங்க வேல் மற்றும் சேவல் கொடியுடன் வள்ளி தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக, காலை விநாயகர் பூஜையும், தொடர்ந்து சுப்பிரமணிய திரிசதி மூலமந்திர சிறப்பு ஹோமமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. அதேபோல், மாலை மகா அபிஷேகம், அலங்காரமும், சுப்பிரமணிய திரிசதி அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.