ஆற்காடு அருகே குடி போதையில் மாமனாரை  அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அம்சா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 45). இவருக்கு சுமையா (வயது 40) என்ற மனைவியும், சபியா (வயது 23) என்ற மகளும் உள்ளனர். சபியாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவரான ரஹமதுல்லாவுக்கும் (வயது 27) கடந்த 3 வருடங் களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது.

இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சபியா, தற்போது நிறை மாதகர்ப்பிணியாக உள்ளார்.

அடித்துக் கொலை

கடந்த சில நாட்களாகவே வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ரஹமதுல்லா குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் குடிபோதையில் திருடுவதிலும் ரஹமத்துல்லா ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் ரஹமதுல்லா வுக்கும் சபியாவின் பெற்றோருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ரஹமத்துல்லா, மாமனார் இஸ்மாயிலுடன் சண்டை போட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த ரஹமத்துல்லா இஸ்மாயிலை அடித்து உதைத்துள்ளார். ஏற்கனவே இருதய நோயாளியான இஸ்மாயில் ரஹமத்துல்லா தாக்கியதையடுத்து 5 நிமிடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தந்தைஇஸ்மாயில் இறந்ததைப் பார்த்து அவரது மனைவி, மகள் என இருவரும் கதறி அழுதனர்.

உடனே இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த ஆற்காடு போலீ சார் இஸ்மாயில் உடலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரஹமதுல்லாவை கைது செய்தனர்.

நிறைமாதகர்ப்பிணியாக உள்ளநிலையில் தனது தந்தையை கணவரே அடித்து கொன்ற வேதனையில் சபியா கதறி அழுதது அங்கிருந்தவர்களை மனம் உருகச் செய்தது.