கர்நாடக மாநிலம் பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று நேற்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் வந்த போது திடீரென கார் அதன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மூன்று நபர்கள் காயங்களுடன் கீழே குதித்து தப்பி ஓடினார்கள். இதைக் கண்ட அங்கு இருந்த தனியார் பள்ளி இரவு காவலர் இது குறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். கவிழ்ந்து கிடந்த காரை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மொத்தம் 270 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்த ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிந்து விபத்தில் சிக்கி தப்பி ஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.