ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று காலை வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வாலாஜா கச்சால் நாயக்கர் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் உணவுப் பொருட்களின் தரம், அரிசி இருப்பு ஆகிய வற்றை ஆய்வு செய்தார்.

அப்போது பொருட்கள் வழங்கப்பட்ட விவரங்கள், தற்போது இருப்பு உள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவைகளை எடைபோட்டு ஆய்வு செய்தார். பொருட்களின் இருப்பு, எடை அளவு ஆகியவற்றை கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்தார். அதனைத்தொடர்ந்து, வாலாஜா ஒன்றியம் பூண்டி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 

தொடர்ந்து, பூண்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அப்போது, சுகாதாரமற்ற நிலையில் இருந்த கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என அங்கன் வாடிமையம் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்த ஆய்வில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணப்பன், பிடிஓ ரவி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.