காட்பாடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வாலிபர் மாயம்


வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி பாரதி. இவர்களுக்கு வெங்கடேசன் (வயது 22), மணிகண்டன் என 2 மகன்கள்.

இதில் வெங்கடேசன் பாலிடெக்னிக் படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி வெங்கடேசன் தன்னுடைய தாயார் பாரதியிடம் வேலை தேடி செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இதற்கிடையில் வெங்கடேசன் தம்பி மணிகண்டனின் வாட்ஸ் அப்புக்கு ஒரு படம் வந்துள்ளது. அதில் வெங்கடேசன் வெட்டுப்பட்டு ரத்தகாயத்துடன் இருப்பது போல் இருந்துள்ளது.

கொலை


இதுகுறித்து அவர் வெங்கடேசனின் நண்பர் ஒருவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் வெங்கடேசனை சிலர் அழைத்து சென்று கொலை செய்ததாகவும், அதனை நான் கூறினால் என்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசில் வெங்கடேசனனின் தாயார் பாரதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் கசம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

உடல் தோண்டி எடுப்பு


இதுகுறித்து காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்து அவர் வரவழைக்கப்பட்டார். அவரது முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.