பறவைகள் சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மை விளைவிக்கும் உயிரினம். ஒரு பறவை ஒரு காட்டினை உருவாக்கும் என்று கூறு வதுண்டு. இறக்கைகள் கொண்ட இரண்டு கால் உயிரினங்கள் பறவை இனத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இவை முதுகெலும்புடையவை மற்றும் முட்டையிட்டு இனம் பெருகும் உயிரினமாகும். இறகுகளால் ஆன சிறகுகளும், பறப்பதற்கு ஏதுவான லேசான எழும்புகளை கொண்டிருப்பதும் பறவைகளின் சிறப்பியல்புகள். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். 

இதுவரை ஏறத்தாழ 10,000 பறவையினங்கள் கண்டறியப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 5 செ.மீ. நீளமும், 1.8 கிராம் எடையுமே கொண்ட மிகச் சிறிய பறவையான தாரிச்சிட்டுகளிலிருந்து, 9 அடி உயரமும் 150-க்கும் அதிகமான எடையும் கொண்ட தீக்கோழி வரை பலபரும அளவுகளிலும் பறவைகள் உள்ளன. இவற்றில் மணிக்கு 160 கி.மீ. வரை பயணிக்கும் இனங்களும் உள்ளன. பறவைகள் பறப்பதையே சிறப்பியல்பாக கொண்டிருப்பினும் சில பறவைகள் பறக்க முடியாதவையாகும். குறிப்பாக தீவுகளில் வசிக்கும் பல இனங்கள் பறக்கும் இயல்பை இழந்துவிட்டன. 

பறவைகளின் வாழ்வில் பெரும்பகுதியை இரை தேடவும், உண்ணவும் செலவழிக்கின்றன. இவற்றில் சைவமும், அசைவமும் உள்ளன. காகம் போன்றவை இரண்டையும் உண்கின்றன. பறவைகளின் உணவு முறைகளுக்கு ஏற்ப அலகுகள் அமைந்துள்ளன. தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகும், கழுகு போன்ற பறவைகளுக்கு கூர்மையான அலகும், வாத்து போன்ற பறவைகளுக்கு ரம்பம் போன்ற விளிம்புடைய அலகும் அமைந்துள்ளது. இவை உணவுத் தேவைகளுக்காகவும், காலநிலை மாற்றம் காரணமாகவும் இடம்பெயர்கின்றன. இதனை வலசைபோதல் என்கிறோம். சில பறவை இனங்கள் 32,000 கி.மீ வரை பறந்து சென்று இடம்பெயர்வதாக கூறப்படுகிறது. பறவைகள் குஞ்சிப் பொறிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் தங்குகின்றன. மற்ற நேரங்களில் மரக்கிளைகளிலோ அல்லது கிடைக்கும் இடங்களில் ஒய்வெடுக்கின்றன. 

மனிதர்களிடையே வணிக ரீதியாகவும், உண விற்காகவும் பறவைகள் பயன்படுத்தப் படுகின்றன. இன்றைய காலங்களில் மனித தேவைகளுக்காக பறவைகளின் இருப்பிடமான மரங்கள் வெட்டப்பட்டு பறவை இனங்களும் குறைந்து வரும் நிலைமை இருந்து வருகிறது. மேலும் இயற்கை சீர்கேடு காரண மாகவும், காலநிலை மாற்றங்களில் ஏற்படும் தாமதங்களாலும் பல பறவைகளை இழந்து வருகிறோம். இவ்வாறு இழந்து வரும் பறவை இனங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5-ந் தேதி(இன்று) தேசிய பறவைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.