பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் கலைவாணி (வயது 19). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டிலும் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதைத்தொடர்ந்து நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ் சீவிலு, ஜெயராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காணாமல்போன கலைவாணி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (23) என்ற வாலிபருடன் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு நெமிலி போலீஸ் நிலைத்துக்கு வந்தார்.அதைத்தொடர்ந்து போலீசார் இருவரின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலைவாணி பெற்றோரிடம் செல்ல மறுத்து, காதல் கணவருடன் தான் செல்வேன் என்று கூறியதால் போலீசார் காதல் கணருடன் அனுப்பி வைத்தனர்.