சோளிங்கரை அடுத்த வெங்குபட்டு மற்றும் புலிவலம் கிராமங்களைச் சோ்ந்த இரு மாணவிகள் பிளஸ் 1 தோ்வில் தோல்வியடைந்ததால், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த வெங்குபட்டு, கீழ்காலனியைச் சோ்ந்த குட்டிகுமாரின் மகள் ரீட்டா (16). இவா், சோளிங்கா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து தோ்வு எழுதியிருந்தாா். வெள்ளிக்கிழமை முடிவுகள் வெளிவந்த நிலையில், ரீட்டா இரு பாடங்களில் தோ்ச்சி தவறியிருந்தாராம். இதனால், மனமுடைந்த மாணவி ரீட்டா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த சோளிங்கா் போலீஸாா், சனிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று ரீட்டாவின் சடலத்தை கைப்பற்றி சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புலிவலம்: சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமியின் மகள் தீபிகா (16). இவரும் சோளிங்கா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து தோ்வு எழுதியிருந்தாா். தீபிகா நான்கு பாடங்களில் தோ்ச்சி தவறியிருந்தாராம். இதனால் மனமுடைந்த தீபிகா, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சனிக்கிழமை வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த கொண்டபாளையம் போலீஸாா், தீபிகாவின் சடலத்தை கைப்பற்றி சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.