வாலாஜா அடுத்த எடகுப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கோகுல்பிரசாத், 14, சென்னையில், 9ம் வகுப்பு படித்து வந்தார். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் வெங்கடேசன், சில நாட்களுக்கு முன், எடகுப்பத்துக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் மாலை மாணவர் கோகுல்பிரசாத், தன் நண்பர்களுடன் அப்பகுதி கல்குவாரி குட்டையில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கினார்.

இதையடுத்து, கிராம மக்களும், ராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினரும் கோகுல் பிரசாத்தை தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராணிப்பேட்டையிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், எட்டு மணி நேர தேடுதலுக்கு பின், மாணவர் கோகுல் பிரசாத் உடலை கண்டெடுத்தனர். வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.