ராணிப்பேட்டை காந்தி நகர் பைபாஸ் ரோடு பகுதியில் வசித்து வருபவர் தாமரைக் கண்ணன் (38). இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் வாலாஜாவிலிருந்து ராணிப்பேட்டையை நோக்கி தனது காரில் சென்றார். காரை அவரே ஒட்டிச் சென்றுள்ளார்..

அப்போது சித்தூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வி.சி மோட்டூர் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராமல் சாலையில் நடுவே அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் இவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் கார் முற்றிலுமாக நசுங்கியது. மேலும் காரை ஓட்டிச் சென்ற டாக்டர் தாமரைக் கண்ணனுக்கு தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ளான காரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கிரேன் உதவியுடன் சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்