அம்மூர் அருகே அனுமதியின்றி மண் அள்ளியதாக லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மூர் அடுத்த கல் மேல்குப்பம் கிராமத்தில் உள்ள ஏரியிலிருந்து சில நாட்களாக அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஏரியில் மண் அள்ளி கொண்டிருந்தவர்களிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அவர்கள் அலட்சியமான பதில் அளித்ததால், தங்களது குடியிருப்பின் வழியாக மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நேற்று முன்தினம் வழிமறித்த பொதுமக்கள், வருவாய் துறையினர் வழங்கிய ஆணையை கேட்டு லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ராணிப்பேட்டை காவல் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள், மண் அள்ளுவதற்கு அளித்த ஆணையை சரிபார்த்த பிறகு சிறைபிடிக்கப்பட்ட லாரியை அனுப்பி வைத்தார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.