ராணிப்பேட்டை அருகே உள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா (வயது 23). இவருக்கும் லாரி டிரைவர் பாலு என்பவருக்கும் திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயது மற்றும் 1 வயததில் 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் பிரியா நேற்று அதிகாலை மயக்கம் அடைந்துள்ளதாகவும், அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் பிரியாவின் தாயாருக்கு பாலுவின் உறவினர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பிரியாவின் தாயார் ரமா வாலாஜா மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, பிரியா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

மேலும் அவர் மகள் பிரியாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து ராணிப்பேட்டை போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் இது குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.