அரக்கோணத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். உடன் எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், ஒன்றியக்குழு தலைவர் ச.நிர்மலா சவுந்தர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிமுகம் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தணிகைப் போளூர் பகுதியில் உள்ள பிடிஓ அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய உதவி பொறியாளர் ஜெ.சரவணன் வரவேற்றார். 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: 

அரக்கோணம் ஒன்றிய பகுதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிராமங்கள் தோறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்று மக்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.

அரக்கோணம் ஒரு முன்மாதிரியான ஒன்றியம் ஆகமாற்ற வேண்டும். தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சி. அதேபோல், இது நம் ஆட்சியாகும். கட்சி பேதம் பார்க்காமல் மக்களுக்காக அனைவரும் சேவையாற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். உலகமே பாராட்டும் அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நல்லாட்சி புரிந்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் ச.நிர்மலா சவுந்தர் வாழ்த்துரை வழங்கி பேசினார். இதில், அரக்கோணம் ஒன்றிய குழு துணைத் தலைவர் வி.புருஷோத்தமன், மாவட்ட கவுன்சிலர்கள் அம்பிகாபாபு, பவித்ரா சசிகுமார், ஒன்றிய கவுன் சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பிடிஓ குமார் நன்றி கூறினார். இதேபோல், காவேரிப்பாக்கத்தில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிமுக கூட்டத்தில், சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அனிதா. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சக்தி, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முனியம்மாள். திமுகஒன்றிய செயலாளர் சி.மாணிக்கம், பேரூராட்சி செயலாளர் பாஸ்(எ) நரசிம்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாலாஜா பிடிஓ அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ஒன்றிய குழுதுணைத்தலைவர் ராதா கிருஷ்ணன். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மாலதி கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் இந்திராணி சுந்தரம், கடப்பேரி ஊராட்சி தலைவர் எம். சண்முகம், முகுந்தராயபுரம் ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை பாரதிநகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகவளாகத்தில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிமுகக் கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, துணைத்தலைவர் மு.நாகராஜீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி. மாவட்ட ஊராட் சிக்குழு உறுப்பினர்கள் அம்பிகா. பவித்ரா, மங்கையர்கரசி, சுந்தரம்மாள், சக்தி, கிருஷ்ணமூர்த்தி. செல்வம், மாலதி, காந்திமதி, தன்ராஜ், சிவகுமார். மாவட்ட அவைத் தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.