வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா,அனந்தலை கிரா மத்தில் 11 கல்குவாரிகளை திறப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வாலாஜா-சோளிங்கர் சாலை கீழ்புதுப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.


கூட்டத்தில் அனந்தலை கிராம மக்கள் கூறுகையில், 'அனந்தலை கிராமத்தில் உள்ள கல்குவாரிகள் இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனால் நிலக்கடலை, நெற்பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. மேலும், ஜல்லிக்கற்கள் ஏற்றிச்செல்லும் கனரகலாரிகளால் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளது. சாலைகள் முழுவதும் ஜல்லிக்கற்களை கொட்டி செல்கின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், தூசி துகள்கள் கண்களில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது' என்றனர்.

தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற வேறு சிலர் கல்குவாரிகளை திறப்பதால் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர். இதையடுத்து, ஒருதரப்பினர் கல்குவாரிகளை திறக்க வேண்டாம் என்றும், மற்றொருதரப்பினர் கல்குவாரிகளை திறக்க வேண்டும் என்றும் தெரிவித்ததால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இருதரப்பு மக்களையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சமாதானம் செய்தார். தொடர்ந்து, கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, அதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதேபோல், கல்குவாரி திறக்க வேண்டும் என்றும், திறக்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அனந்தலை கிராமத்தில் கல்குவாரிகள் செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்பதற்காக இந்த கூட் டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் மனுக்கல் குறித்த விவரங்கள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவானது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது' என்றனர்.

இதில், மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், ஆர் டிஓபூங்கொடி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.