ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்த களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்(55), விவசாயி. இவரது தங்கை அதே பகுதியை சேர்ந்தவர் கனகவள்ளி(50). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வாலாஜா அடுத்த ராமாபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் வந்தனர். பின்னர் தங்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

வள்ளுவம்பாக்கம் சாலையில் இருந்து வாலாஜா சோளிங்கர் மெயின்ரோடு வளைவில் திரும்பினர். அப்போது திருத்தணி நோக்கிச் சென்ற அரசு பஸ், இவர்களின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அண்ணன், தங்கையை பொதுமக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் 2 பேரும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகவள்ளி நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். பரசுராமனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.