people-are-suffering-due-to-the-shortage-of-drinking-water

ராணிப்பேட்டை நகரத்துக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது.
மேலும் பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து கிணறுகளின் மூலமாக தினமும் 50 லட்சம் தண்ணீர் எடுத்து நகரம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில் பூட்டுத்தாக்கு பகுதியில் பாலாற்றில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பைப் ஒன்று நீரில் மூழ்கியதுடன் சேதமடைந்துள்ளதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ராணிப்பேட்டை நகரத்துக்கு ஒகேனக்கல் தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ராணிப்பேட்டை நகரத்துக்கு குடி நீர் சப்ளை செய்யும் கிணறுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. அதில் பொருத்தியிருந்த பைப்லைன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராணிப்பேட்டை நகரத்துக்கு பாலாற்று குடிநீர் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்று ஏற்பாடாக தனியார் போர்வெல்லிலிருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு இப்போது வார்டு வாரியாக சப்ளையாகிறது. வார்டுகளில் மக்கள் கூடும் இடங்களில் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டு தண்ணீர் கொடுக்கிறார்கள். ஆனாலும் இந்த தண்ணீர் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். மற்றவைகளுக்கு வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள போர் வெல்களை மக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். 

பாலாற்றில் வெள்ளம் வடிந்து கிணறுகள் மற்றும் பைப்லைன்கள் மீட்கப்பட்ட பிறகே நகரத்துக்கு பாலாற்று குடிநீர் சப்ளை யாகும். அதற்கு இன்னும் எத்தனை நாளாகும் என்பது வரும் காலத்தில் பெய்யும் மழை மற்றும், ஆற்றில் ஓடிவரும் வெள்ளத்தை பொருத்தது. ஆகவே பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.