ராணிப்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான தோல் பதனிடும் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கழிவு நீரைசுத்திகரிப்பதற்கு 3 சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கிறது. இந்த பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளில் தங்களின் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஆனுப்பி  சுத்திகரிக்கப்பட்ட நீரை மறு சுழற்சி முறையில் மீண்டும் தொழிற்சாலையில் பயன்படுத்துவதாக திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு கட்டடம், இயந்திரங்கள் மற்றும் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்திக்கொள்ள என்று ஒவ்வொரு திட்டத்துக்கும் பல கோடி ரூபாய்வும் மானியத்தை மத்திய மாநில அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் சில தொழிற்சாலைகள் சுத்தி கரிப்பதற்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலவு செய்யாமல், சேமித்த கழிவுநீரை திருட்டுத்தனமாக ஏரி, ஆற்றில் விடுவது, டிரம்களில் சேகரித்து எடுத்துச்சென்று கண்கானாத இடத்தில் கொட்டி விட்டு வரும் கிரிமினல் வேலைகளை செய்து வருகின்றன. 

இதை மக்கள் கண்டு பிடிக்கும்போது அது பத்திரிகைளில் செய்தியாக வருகிறது. அதை பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளில் சிலர் பணம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக நல விரும்பிகள் அடிக்கடி கூறி வருவதுடன் போராடவும் செய்கின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை முத்துக்கடை எம்பிடி சாலையை ஒட்டி இயங்கும் தோல் தொழிற் சாலை தனது கழிவுநீரை அருகில் ஓடும் தண்டலம் ஏரி கழிவுநீர் கால்வாயில் பைப் மூலம் வெளியேற்றுவதாகவும் இந்த ஆபத்து நிறைந்த கழிவுநீர், ஏரியில் வரும் நல்ல நீருடன் சென்று ஆற்றில் கலப்பதாகவும் ராணிப்பேட்டை சப்கலெக்டருக்கு சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிரடியாய் களம் இறங்கிய ராணிப்பேட்டை சப்கலெக்டர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில் சமூக ஆர்வலரின் புகார் உண்மை என்பது தெரியவந்தது. பைப்லைனில் கால்வாய்க்குள் வெளியேற்றப்படும் கழிவுநீரை சேகரித்த சப்கலெக்டர் அதை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்.

ஆய்வு முடிவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.