நாளை(15-1-2022) சனி மஹாப்பிரதோஷம்.. சிவ தரிசனம் கோடி புண்ணியம்..!! Shiva darshan kodi punniyam
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
சனி பிரதோஷத்தின் சிறப்பு : Sani Pradhosham Special
சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
பிரதோஷ நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
சிவாலயங்களில் சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
வீட்டில் எப்படி வழிபாடு செய்வது? Pradhosham worship in Home
வீடு, வாசலை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.
நாள் முழுவதும் விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து மாலையில் சிவனை தரிசனம் செய்யுங்கள்.
கோவிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே சிவனை மனதார நினைத்து தரிசனம் செய்யுங்கள்.
வீட்டில் சிவன்-பார்வதி, சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் வைத்து விளக்கேற்றி வழிபடலாம்.