வாலாஜா அடுத்த சுங்க சாவடி அருகே சென்னசமுத்திரம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரம் பொது மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தின் அருகே தனியார் நிறுவனத்தின் சார்பில் 30 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பெரிய மதிற்சுவர்கள் அமைக்கப்பட்டது. 

இதற்கு சென்னசமுத்திரம் கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு நடைபாதையாக செல்ல முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அந்த நிறுவனம் பணிகளை முடித்து அதை உரியவர்களிடம் ஒப்படைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து தகவறிந்தும் வாலாஜா போலீசார் விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்ய அனுமதிக்கமுடியாது என எச்சரித்தனர். உடனடியாக அந்த குடிருப்பு பகுதி பிரதான வாசலில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். 

பின்னர் போலீசார், தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாணப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.