ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்புதுறை சார்பில் மத்திய அரசு வேலை வாய்ப்பிற்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் தேர் வாணையத்தால் (staff selection commission) Multi Tasking(Non-Technical), Staff and Havildar (CBIC&CBN) Examination,2022 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வை தமிழ் மொழியில் எழுதலாம். இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு ஆகும். வயது வரம்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியில் 18 முதல் 27 வயது ஆகும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உள்ளது. நாடு முழுவதும்.சுமார் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 17ம் தேதி கடைசிநாளாகும். மேலும், விவரங்களுக்கு http://ssc.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

போட்டித் தேர்வுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.