திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 48). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா ஈசலாபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரிடம் டிரைவராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயின் நிலத்தில் அறுவடை செய்த கரும்புகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வேலூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுகளை இறக்கிவிட்டு, குருவராஜபேட்டை வழியாக பெரியகடம்பூர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

சின்னகடம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட 7-வது மையில் என்ற இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் இருந்த கல் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த எல்லப்பனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் எல்லப்பன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்து குறித்து திருத்தணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். எல்லப்பனுக்கு 2 மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.