கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், தேநீர் கடை ஒன்று, வாடிக்கையாளர்கள் மீது ஜில்லென நீர்த் துளிகள் விழும் வகையில் water shower-களை பொருத்தி அசத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு வார காலமாக வெப்பநிலை சதம் அடித்து வருகிறது. இதன் காரணமாக வெளியில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் வெப்பத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரத்தில், சிஎம்சி மருத்துவமனை அருகே, தேநீர்க் கடையொன்று இயங்கி வருகிறது. இங்கு கோடை வெப்பத்தைத் தணிக்கும் விதமாக, மிஸ்ட் எனப்படும் நீர்த்துளிகள் தெளிப்பது போல் நவீன இயந்திரம் மூலம் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.

கடையின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள, இந்த சிறிய அளவிலான Water Shower-களில் இருந்து ஜில்லென வெளியேறும் நீர்த்துளிகள் வாடிக்கையாளர்கள் மீது சாரல் மழைபோல் விழுந்து உள்ளத்தைக் குளிர்விக்கிறது. இந்தப் புதுமையான ஏற்பாடு பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.