கோடைகாலத்தின் ஆரம்பத்திலேயே சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. 
இன்னும் சில நாட்களில் குழந்தைகளுக்கு பள்ளி தேர்வுகள் முடிந்து சம்மர் ஹாலிடே ஆரம்பமாகிவிடும். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் நண்பர்களுடன் விளையாட செல்வதை தடுக்க முடியாது. ஆனால் குழந்தைகளை கொடுமையான வெயில் மற்றும் அதனால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து காக்க முடியும். குழந்தைகளை வெயில் கால சரும பிரச்சனைகள் மற்றும் நோய்களில் இருந்து காக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

உங்கள் குழந்தைகள் அதிக தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு, பழச்சாறு போன்ற புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அருந்துவதை கட்டாயமாக்குங்கள். உடலில் நீர்ச்சத்து சேர உதவும் தர்ப்பூசணி போன்ற பழங்களையும் சாப்பிட கொடுக்கலாம். வெயிலில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும் குழந்தையில் உடலில் கற்றாழை ஜெல்லை பூசிவிடுங்கள். இது சருமத்தை மென்மையாக்குவதோடு, வெயிலால் சருமத்தில் ஏற்படக்கூடிய  வறட்சி, எரிச்சல், தோல் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். இளம் பருவத்தினருக்கு முகத்தை மென்மையான ஃபேஸ் வாஷ் மூலம் எப்படி சுத்தம் செய்வது என்று கற்றுக்கொடுப்பதன் மூலமாக முகப்பரு பிரச்சனைகளில் இருந்து அவர்கள் தப்பிக்க உதவலாம்.

கோடை வெப்பத்தில் சருமத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஒரு நாளைக்கு 2 - 3 முறை முகத்தை கழுவ வேண்டும். வளர்ந்த குழந்தைகளுக்கு சந்தனம் அல்லது வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை குளிர்ந்த ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் கொண்டு பூசலாம். பாலிஸ்டர், சிஃப்பான் போன்ற செயற்கை துணிகளை குழந்தைகளுக்கு அணிவிக்காதீர்கள். பருந்தி ஆடைகள் மட்டுமே நல்லது. உச்சந்தலை மற்றும் கழுத்தில் இருந்துதான் அதிகமாக வியர்க்கக்கூடும், இதனால் பாக்டீரியா தொற்று மற்றும் உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் உச்சந்தலை மற்றும் முடியை சுத்தமாக வைத்திருக்க இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மென்மையான நுரை வரும் குழந்தை ஷாம்பூவை பயன்படுத்தி வரலாம்.