இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகில் எந்தவொரு நாடும் இன்னும் முழுமையாக கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே வைரஸ் பாதிப்பைத் தடுக்க ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா வேக்சின் செலுத்தும் பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பூஸ்டர் டோஸ் பணிகளையும் தொடங்கிவிட்டன.

வேக்சின் பணிகள்

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா முதல் அலை மிக மோசனமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் மத்திய அரசு கொரோனா வேக்சின் செலுத்தும் பணிகளில் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வேக்சின் போடுவதை மாநில அரசுகள் மீது தள்ளியது. இந்தச் சூழலில் தான் 2ஆம் அலை உச்சம் தொட்டது. இதில் இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

தடுப்பூசி பற்றாக்குறை

அப்போது தடுப்பூசிகளுக்கும் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. பொதுமக்கள் பல மணி நேரம் வரை காத்திருந்து தடுப்பூசி செலுத்த வேண்டிய அவல சூழல் ஏற்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் சுகாதார ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முன் வேக்சின் ஏற்றுமதி செய்யப்பட்டதாலேயே இந்த பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும் தடுப்பூசி பணிகள் குறித்து உச்ச நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்தது. இதன் பின்னரே 18+ அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்றும் அதற்கான செலவுகளை மத்திய அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டது.

கொரோனா 2ஆம் அலை

இதன் பிறகு மத்திய அரசு எடுத்து நடவடிக்கைகளால் வேக்சின உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெறத் தொடங்கியது. இதுவரை நாட்டில் 90 கோடிக்கும் அதிகமானோருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா 2ஆம் அலையும் முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ளது.

ஏற்றுமதி தடை நீக்கம்

இதையடுத்து வேக்சின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்திருந்த நீக்குவதாக மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. நேபாளம், வங்கதேசம், மியான்மார், ஈரான் ஆகிய நாடுகளுக்கு கொரோனா வேக்சின் அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது அண்டை நாடுகளுக்கு வேக்சின் ஏற்றுமதி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை செய்திதத்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி தொடக்கம்

இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்திதத்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி மேலும் கூறுகையில், 'ஐநா சபையில் சமீபத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் எனக் கூறினார். முதற்கட்டமாக அண்டை நாடுகளுக்கு வேக்சின் ஏற்றுமதி தொடங்கப்படவுள்ளது. நேபாளம், வங்கதேசம், மியான்மார், ஈரான் ஆகிய நாடுகளுக்கு வேக்சின் அனுப்பப்பட்டுள்ளது. நிலைமை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் தேவையின் அடிப்படையில் ஏற்றுமதி குறித்து முடிவெடுக்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.