ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் நபர்களிடம் தொடர்பு வைத்திருந்ததாக சோளிங்கர் மற்றும் அரக்கோணத்தை சேர்ந்த 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அரக்கோணம் பகுதியில் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் நபர்களிடம் போலீசார் சிலருக்கு தொடர்பு இருப்பதாக எஸ்பி தீபா சத்யனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பந்தப்பட்ட போலீசாரின் செல்போன் அழைப்புகளை எஸ்பி தனிப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்களுடன் போலீசாருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, சோளிங்கர் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரியும் வேணு கோபால், அரக்கோணம் தாலுகா போலீஸ் ஏட்டு ரமேஷ், அரக்கோணம் டவுன் போலீஸ்காரர் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி தீபா சத்யன் நேற்று உத்தரவிட்டார்.