ராணிப்பேட்டை நகரில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் சப்ளை சீராக இல்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இருந்த குடிநீர் சப்ளை, திடீரென நான்கு நாட்களுக்கு ஒருமுறை என்றாகியுள்ளது. குடி நீர் சப்ளை நேரமும் குறைந்துள் ளது. இதனால் நகரின் பல பகுதிகளில் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சமீபத்தில் பெய்த மழையால் பாலாற்றில் அதிகளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, ஆற்றில் உள்ள பைப்லைன்கள், மோட்டார்கள் சேதமடைந்ததால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் சில வாரங்கள் குடிநீர் சப்ளை சீராக இருந்தது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ராணிப்பேட்டையில் குடிநீர் சப்ளை குளறுபடியாகியுள்ளது. 

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், சில இடங்களில் மோட்டார்கள் பழுதானதால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இப்போது நிலைமை சீராகியுள்ளதாகவும் இனிமேல் பிரச்னை இருக்காது என்றும் கூறுகிறது. ஆனாலும் நகரில் பல பகுதிகளில் குடிநீர் சப்ளை இன்னும் சீராகவில்லை.

மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டிருப்பது இந்த தேர்தலில் எதிரொலிக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஓட்டு சேகரிக்க செல்லும் திமுக வேட்பாளர்கள் பலர் மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அமைச்சர் காந்தி, நகரில் நிலவும் - குடிநீர் பிரச்னை விரைவில் தீரும் என்றார். இதைத்தொடர்ந்து அவர் ராணிப்பேட்டை நகராட்சி 21, 24,25, ஆகிய வார்டுகளில் வீதி வீதியாக நடந்து சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது அமைச்சரிடம் பொதுமக்கள் எந்தவிதமான புகாரும் கூறாதபடி கட்சியினர் முன் கூட்டியே சரிசெய்துவிட்டனர். எனினும், நகரில் நிலவும் குடிநீர் பிரச்னை இந்த தேர்தலில் நிச்சயம் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று திமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.