அரக்கோணம் வழியாக சென்ற ரயிலில் இடம் பிடிக்கும் தகராறில் ஒருவர் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். இதையடுத்து 5 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

வடமாநிலம் சில்காட்டு பகுதியில் இருந்து சென்னை பெரம்பூர், அரக்கோணம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் உள்ள பொதுப்பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் சிலரிடையே, இடம் பிடிப்பது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது, கைகலப்பாக மாறியது. இதனால் சகபயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், பயணிகள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்ட சம்பவத்தின்போது தங்க செயின் ஒன்று மாயமானதாக தெரிகிறது.

இதனால், பயணி ஒருவர் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தினார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு ரயில் இயக்கப்பட்டது.

அப்போதும், மீண்டும் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார். இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சியும், அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் நேற்று காலை வந்து நின்றது.

பொது பெட்டியில் பயணிகளுக்கு இடையே தகராறு என தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து வந்து, தகராறில் ஈடுபட்ட 5 வாலிபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் வந்து விசாரித்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும், அபாயச் சங்கிலியை இழுத்து தொடர்பாக 1000 அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சிறிது நேரம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.